கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோ பலருக்கு பகிரப்பட்டுள்ளது; பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோ பலருக்கு பகிரப்பட்டுள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.;
மங்களூரு:
கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோ பலருக்கு பகிரப்பட்டுள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
பா.ஜனதாவினர் போராட்டம்
உடுப்பி அருகே அம்பலபாடியில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் 3 மாணவிகள் கழிவறையில் செல்போனை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனை கண்டித்து பா.ஜனதா உள்பட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு யஷ்பால் சுவர்ணா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ரகுபதி பட் தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்கள் உடுப்பி பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து பேரணியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர், அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திராவை சந்தித்து மனு கொடுத்தனர்.
பலருக்கு பகிரப்பட்டுள்ளது
இந்த போராட்டத்தின்போது யஷ்பால் சுவர்ணா எம்.எல்.ஏ. பேசுகையில், கல்லூரி மாணவி ஆபாச வீடியோ பலருக்கு பகிரப்பட்டுள்ளது. இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. வீடியோ எடுத்த மாணவியிடம் 3 செல்போன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த மாணவியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்
கழிவறையில் செல்போனை வைத்து வீடியோ எடுப்பது சாதாரண காரியம் அல்ல. நாளை அந்த மாணவி, யார் கொடுத்தாலும் வெடிகுண்டை வைக்க கூட தயங்க மாட்டார். இந்த வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையா, உள்துறை மந்திரி பரமேஸ்வர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களாக உள்ளனர் என்றார்.
கொலைக்கு இணையாக குற்றம்
முன்னாள் எம்.எல்.ஏ. ரகுபதிபட் பேசுகையில், இது கொலைக்கு இணையான குற்றமாகும். அந்த வீடியோ யாருக்கு அனுப்பப்பட்டது என்பதை வெளியிட வேண்டும். முறையான விசாரணை நடத்தினால் அனைத்து தகவல்களும் வெளிவரும். ஒரு பிரிவினரை பாதுகாக்க அரசு கவனம் செலுத்துகிறது. போலீசாரின் கைகளை அரசு கட்டி வைத்துள்ளது. இந்த வழக்கில் பாரபட்ச விசாரணை நடத்த வேண்டும் என்றார்.