காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு; விசாரணை அமர்வை அமைக்காமலேயே தலைமை நீதிபதி ஓய்வு - உமர் அப்துல்லா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கில் விசாரணை அமர்வை அமைக்காமலேயே தலைமை நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டார் என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-29 04:10 GMT

ஸ்ரீநகர்,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த என்.வி. ரமணா கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக கடந்த சனிக்கிழமை யு.யு. லலித் பதவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பணியில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கோடை விடுமுறை முடிந்த பின் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஏப்ரல் மாதம் தெரிவித்தார். அதன்பின், இந்த வழக்கில் விசாரணை அமர்வை அமைக்காமலேயே அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இதுபோன்ற அமைப்புகள் மீதான நம்பிக்கை ஏன் குறைகிறது என சில ஆச்சரியப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்