மணிப்பூர் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி

மணிப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

Update: 2023-07-31 08:36 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் வன்முறையில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வீடியோ தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடவேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

வழக்கு விசாரணை தொடங்கிய உடன், மணிப்பூரில் மே 3ம் தேதி வன்முறை தொடங்கியது முதல் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

'இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், இது ஒன்று மட்டுமே பெண்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் அல்ல. மேலும் பல பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால் இது ஒற்றை சம்பவம் அல்ல. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை தடுக்க நாம் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.   

Tags:    

மேலும் செய்திகள்