அரசின் தீவிர நடவடிக்கையால் காலரா கட்டுக்குள் வந்துள்ளது - மத்திய மந்திரி எல்.முருகன்
புதுச்சேரி அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்துள்ளது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்,
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வயிற்றுப்போக்கு மற்றும் காலராவால் பாதிக்கப்பட்டு, அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நேரில் பார்வையிட்டு உணவுப்பொருட்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக வயிற்றுப்போக்கு மற்றும் காலரா இருந்துவருகிறது. அரசின் துரிதமான நடவடிக்கையால் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா கட்டுக்குள் வந்துள்ளது.
காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தினசரி நேரில் சென்று, விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கை, சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை காலத்தோடு வழங்கி, தூய்மைப் பணிகளை செய்ததால் தற்போது அரசு மருத்துவமனையில் 24 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகம் காரைக்காலில் உள்ள அனைத்து நீர் நிலை தொட்டிகளை நவீன உபகரணங்களோடு சுத்தம் செய்த்துள்ளனர். அரசு மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை கையிருப்பு வைத்துள்ளது. எனவே, பொதுமக்கள் காலரா குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.