அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலை சிகரத்துக்கு தலாய் லாமா பெயர் - சீனா எதிர்ப்பு

அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தொடர்பாக இந்தியா -சீனா இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

Update: 2024-09-29 16:02 GMT

புதுடெல்லி,

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன. இதற்கிடையே இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்தநிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை செல்லாத மலைச்சிகரம் ஒன்றுக்கு தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) ஒரு குழுவினர் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெற்றிகரமாக 20,942 அடி உயரத்தில் உள்ள அதன் உச்சியை அடைந்தனர். இதையடுத்து அந்த சிகரத்துக்கு சாங்யாங் கியாட்சோ என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்,

ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவுக்குஉரிய பகுதியாகும். அப்பகுதியில் உள்ள இடத்துக்கு இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம். இதுவே சீனாவின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்