சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினர் அதிரடி; 6 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் பெண் நக்சலைட்டு உள்பட 6 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2024-03-27 07:28 GMT

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரில் அடர்ந்த காடுகளில் நக்சலைட்டுகள் அதிக அளவில் பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வழக்கம். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படையினர் கூட்டாக இணைந்து பசகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிகுர்பாட்டி மற்றும் புஸ்பகா கிராமங்களையொட்டிய வன பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், பெண் நக்சலைட்டு உள்பட 6 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிஜாப்பூர் மாவட்டம், பஸ்தார் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான தேர்தல் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்