சத்தீஸ்கர்; என்கவுண்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சல்கள் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், நக்சல் சீருடைகள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெலம் குட்டா மலைப்பகுதியில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சி.ஆர்.பி.எப்-பின் உயரடுக்கு பிரிவான `கமாண்டோ பட்டாலியன் பார் ரெசல்யூட் ஆக்ஷன்' (கோப்ரா) ஆகியோர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறையின் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று நக்சல்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், நக்சல் சீருடைகள், மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
உயிரிழந்த நக்சல்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.