சாத் பூஜை: டெல்லியில் இந்த நாளில் மதுக்கடைகள் திறக்கப்படாது
டெல்லியில் குடியேறிய பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சல்’ மக்களுக்கு சாத் பூஜை முக்கியமான பண்டிகையாகும்.;
புதுடெல்லி,
சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் இந்து பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம்.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான சாத் பூஜை இன்று தொடங்கி வரும் 20 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின்போது மக்கள் வழிபடுவார்கள்.
பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் குடியேறிய பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சல்' மக்களுக்கு சாத் பூஜை முக்கியமான பண்டிகையாகும். அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்வார்கள்.
இந்நிலையில், சாத் பூஜையை முன்னிட்டு நாளை மறுநாள் (நவ. 19) டெல்லியில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூடும்படி கலால் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளில் 900க்கும் மேற்பட்ட இடங்களில் சூரியக் கடவுளை வழிபடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.