70 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சிறுத்தைகள்! தயார் நிலையில் பூங்கா நிர்வாகம்
5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் நமீபியாவில் இருந்து நாளை காலை டெல்லி கொண்டு வரப்படுகின்றன.
போபால்,
நமீபியாவில் இருந்து சார்ட்டர் சரக்கு விமானம் (போயிங் 747) மூலம் 8 சிறுத்தைகள் மத்திய பிரதேச மாநிலம் குனோ-பால்பூர் தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்படும்.
இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது.
அதேநேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது.
5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து நாளை காலையில் டெல்லி கொண்டு வரப்படுகின்றன. பின்னர் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் சிறுத்தைகளை பிரதமர் மோடி நாளை தனது பிறந்தநாளன்று பூங்காவில் விடுகிறார்.
இந்த நிலையில் விமான பயணத்தின் போது சிறுத்தைகள் வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.இதனால் இந்த முழு பயணத்தின் போதும் நமீபியாவில் இருந்து வரும் சிறுத்தைகளுக்கு இடையில் உணவு வழங்கப்படாது. நமீபியாவில் இருந்து புறப்பட்ட பிறகு, இந்த சிறுத்தைகளுக்கு உணவு குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் தான் வழங்கப்படும். நீண்ட பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற உணர்வுகளை உருவாக்கி மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை தேவை, என வனத்துறை அதிகாரி சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீட்டா திட்டத்தின் தலைவர் எஸ்பி யாதவ் கூறுகையில்:-
சார்ட்டர் சரக்கு விமானம் (போயிங் 747) சிறுத்தைகளை கொண்டுவர தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்கு உள்ளிட்ட காரணங்களுக்காக வழியில் எங்கும் தரையிறக்கப்படவோ நிறுத்தப்படவோ வேண்டியதில்லை, நேரடியாக இந்தியாவை அடைந்துவிடும்.
செயற்கைக்கோள் ரேடியோ காலர்கள் ஒவ்வொரு சிறுத்தையின் கழுத்திலும் மாட்டப்பட்டு அவற்றின் புவிஇருப்பிடம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு சிறுத்தைக்கும் ஒரு பிரத்யேக கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.