சந்திரயான்-3: 14 நாட்களுக்கு பிறகு நிலவில் சூரிய ஒளி இல்லாத போது விக்ரம் லேண்டர்- ரோவர் என்ன ஆகும்...?

சூரிய ஒளி கிடைக்கும் வரை அனைத்து அமைப்புகளிலும் போதுமான ஆற்றல் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெளிவுபடுத்தி உள்ளார்.

Update: 2023-08-25 09:49 GMT

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உறைந்த நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பும் இதுவரை அறியப்படாத தென் துருவ பகுதிக்கு இந்தியா ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ரூ.600 கோடி செலவில் சந்திரயான்-3 ஜூலை 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 41 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, அது நிலவின் தென் துருவத்தை அடைந்தது. விக்ரம் லேண்டர் கடந்த புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு ரோவர் பிரக்யானுடன் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.

இது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவிற்கு தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அளித்துள்ளது.

2019 இல் சந்திரயான்- 2 தோல்வியடைந்த பணிக்குப் பிறகு சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை இறக்கிய இந்தியா, இப்போது அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவின் வரிசையில் இணைந்துள்ளது.

சந்திரயான்-3 க்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை. சந்திரயான்-3, நிலவின் மேற்பரப்பின் கனிமங்களை பகுப்பாய்வு செய்வது உட்பட தொடர்ச்சியான சோதனைகளில் ஈடுபடும். ஆனால் 14 பூமி நாட்களுக்குப் பிறகு விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை சந்திரயான் -3 இன் சூரிய சக்தியில் இயங்குபவை. இதன் ஆயுட்காலம் ஒரு சந்திர நாள் அல்லது 14 பூமி நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதினான்கு நாட்கள் தொடர்ச்சியான சூரிய ஒளி இந்த அமைப்புகளுக்கு முக்கியமானது. ஆகஸ்ட் 23 முதல் சந்திரன் சூரியனால் சிறப்பாக ஒளிரும். அதனால்தான் இந்த நாளை மென்மையான தரையிறக்கத்திற்கு இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.

ஒரு சந்திர நாள் 14 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. இந்த நேரத்தில், சந்திர மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் அடையும். இந்த வெப்பநிலையில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட எதுவும் செயல்பட முடியாது.

சூரிய ஒளியில் ஒரு நாளையும் தவறவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து, ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான்-3 திட்டத்திற்கான மென்மையான தரையிறக்கத்தை இஸ்ரோ நிர்ணயித்தது. புதன்கிழமை தரையிறக்கம் தோல்வியுற்றால், அடுத்த நாள் தரையிறக்கம் திட்டமிடப்பட்டது. இது தோல்வியுற்றால், விஞ்ஞானிகள் 29 நாட்களுக்குப் பிறகு அடுத்த சந்திர நாள் வரை காத்திருந்து தரையிறக்க வேண்டும்.

சந்திரயான்-3 ஒரு சந்திர நாள் (அதாவது 14 பூமி நாட்கள்) ஆயுட்காலம் கொண்டது. இருப்பினும், மற்றொரு சந்திர நாளில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை இஸ்ரோ அதிகாரிகள் நிராகரிக்கவில்லை.

சூரிய ஒளி கிடைக்கும் வரை அனைத்து அமைப்புகளிலும் போதுமான ஆற்றல் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெளிவுபடுத்தி உள்ளார்.

சூரியன் மறைந்ததும் எல்லாமே இருண்டு போகும். வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் வரை குறையும். எனவே, இந்த வெப்பநிலையில் கணினி இயங்க முடியாது. ஆனால் வேலை செய்தால், நாம் மகிழ்ச்சி அடையலாம். அது நடக்கும் என்று நம்புவோம் என எஸ். சோம்நாத் கூறினார்.

சந்திரயான்-3-ன் எந்தப் பகுதியும் பூமிக்குத் திரும்பப் போவது இல்லை. அவை நிலவிலேயே நிலைத்திருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்