சந்திரயான்-3 வெற்றி பெற 10 கட்டங்களை தாண்ட வேண்டும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி தகவல்

சந்திரயான்-3 விண்கலம் 10 கட்டங்களை முழுமையாக தாண்டினால் தான் வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பு விஞ்ஞானி தெரிவித்து உள்ளது.

Update: 2023-07-14 22:45 GMT

ஸ்ரீஹரிகோட்டா, 

இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

எல்.வி.எம்-3 ராக்கெட், முதல் கட்டமாக பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலத்தைக் கொண்டு சேர்க்கும். விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட விண்கலம் 2-ம் கட்டமாக இந்தப் பாதையில் சுற்ற வேண்டும். தொடர்ந்து நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளிவிட்டால் தான், நிலவின் சுற்றுப்பாதைக்கு அதைக் கொண்டு செல்ல முடியும். அதுதான் 3-வது கட்டமாகும். இந்த கட்டத்தை 'பாதை உயரம் உயர்த்து கட்டம்' என்பார்கள்.

முக்கியமாக சந்திரயான் 3 விண்கலம் பாதை மாறிவிடாமல் தடுக்க வேண்டும். பூமி, நிலா ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்புவிசையும் சரிசமமாக இருக்க வேண்டும். அந்தப் புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் செலுத்துவது தான் 4-வது கட்டமாகும். ஆனால், இது அவ்வளவு எளிதானதல்ல. இதை மிக மிகத் துல்லியமாகச் செய்ய வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு விசைப் பிடியில்....

அதற்குத்தான் 5-வது கட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, அந்த சம ஈர்ப்பு விசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் 5-வது கட்டமாகும். புவியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்து சந்திரயான் 3 விடுபட வேண்டும். ஆனால் பூமியைவிட்டுத் தொலைவாகச் சென்று கொண்டிருந்தாலும், விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசைப் பிடியில் தான் இன்னமும் இருக்கும்.

அந்தப் புள்ளிக்குச் சென்றதும் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து அதைத் தள்ளிவிட்டால், அதுவரைக்கும் அது இருந்த புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றுவிடும். இதுதான் 6-வது கட்டமாகும். சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. இப்போது, அதை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நிலவுக்கு அருகில் சென்றுவிட்டு பிறகு விலகி விண்வெளியில் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிடாமல், அதை நெறிப்படுத்தி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்ற வைப்பது 7-வது கட்டமாகும்.

முக்கியமான சவால்

விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அப்படிக் கொண்டு வந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பது தான் 8-வது கட்டம். இதுவரை எட்டு கட்ட செயல்முறைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகு தான், இந்த முயற்சியிலேயே மிக முக்கியமான சவால் தொடங்குகிறது.

நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்குவதுதான் அந்தச் சவால். இந்த 9-வது கட்ட செயல்முறை எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் 15 நிமிடங்களில் தான் இந்த முழு திட்டமும் வெற்றிபெறுமா? இல்லையா? என்பதே அடங்கியுள்ளது. இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில் தான்.

நிலவின் தரைப்பரப்பு

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே 4 குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின் போதும் 8-வது கட்ட செயல்முறை வரைக்கும் இதேபோலத்தான் சென்றது. ஆனால், 9-வது கட்டத்தில் தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும் போது தான் தவறு நிகழ்ந்து

தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது. ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்க வேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.

அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும். இதுதான் 10-வது கட்டம். இந்த 10 கட்டமும் கச்சிதமாக நடந்தால் மட்டுமே சந்திரயான்-3 திட்டம் முழு வெற்றியைப் பெறும். இந்த நீண்ட பயணத்திற்கான முதல் அடி இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், வெற்றிகரமாக 10 கட்டங்களையும் கடந்து இந்த முறை சந்திரயான்-3 சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்