சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட்டின் மேல்பூச்சு மராட்டியத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செய்யப்பட்டது - அஜித் பவார் பெருமிதம்
சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட்டின் மேல்பூச்சு தனியார் தொழிற்சாலையில் செய்யப்பட்டது என மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியுள்ளார்.;
மும்பை,
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது சந்திரயான்-3 விண்கலம் 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது.
இந்நிலையில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார், சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட்டின் மேல்பூச்சு சாங்லியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் செய்யப்பட்டது. இது மராட்டிய மாநிலத்திற்கு கிடைத்த பெருமை எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பதிவில் கூறியதாவது , "எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் மேல்பூச்சு, சாங்லியில் உள்ள சந்தீப் சோலுக்குச் சொந்தமான 'டேஸ்ல் டைனகோட்ஸ் பிரைவேட் லிமிடெட்' தொழிற்சாலையில் பூசப்பட்டது. இது நம் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்"
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.