ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவு

ஆந்திராவில் உள்ள கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-24 08:24 GMT

விஜயவாடா,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் ஜனசேனா கட்சி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவலை இன்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 94 இடங்களில் போட்டி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 3 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள 57 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு பா.ஜ.க.வுடன் கூட்டணி நிலைப்பாட்டை பொறுத்து பின்னர் முடிவெடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மக்களுடன் களத்தில் இருப்பவர்களே இந்த முறை தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் 23 வேட்பாளர்கள் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவார்கள், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் உள்ள கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது பா.ஜ.க.வுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து ஆலோசித்து வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்