கர்நாடகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
பெங்களூரு:
3 அடி உயரத்திற்கு மழைநீர்
கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று உப்பள்ளியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டவுன் உள்பட சில இடங்களில் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் பாய்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிள்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை பெய்தது.
அப்போது இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அந்த சமயத்தில் ராமதுர்காவை சேர்ந்த விவசாயி, தனது விளைநிலத்திற்கு சென்றபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் மரம் ஒன்று உள்ளது. அந்த மரம், சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் 5 நாட்கள் மழை
இந்த நிலையில் கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் 5 நாட்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சிக்கமகளூரு, சிவமொக்கா, மைசூரு, கோலார், பெங்களூரு, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேர்தல் நடைபெறும் நாளான இன்றும் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.