ஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பரபரப்பு... முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ராஜினாமா

ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்கவுள்ளார்.

Update: 2024-01-31 15:23 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்துள்ளார். கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்