கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு தடை! மத்திய அரசு உத்தரவு
கோதுமை மாவு, மைதா, ரவை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
கோதுமை மாவு, மைதா, ரவைஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு, மைதா, ரவை மற்றும் முழுக்கால் ஆத்தா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அரசு நேற்று தடை உத்தரவை விதித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் முடிவை குறிப்பிட்டு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டி ஜி எப் டி), 'சில சந்தர்ப்பங்களில் இந்திய அரசின் அனுமதிக்கு உட்பட்டு இந்த பொருட்களின் ஏற்றுமதி அனுமதிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளது.
2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ், இடைநிலை ஏற்பாடுகள் தொடர்பான விதிகள், இந்த அறிவிப்பின் கீழ் பொருந்தாது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி சி ஈ ஏ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உக்ரைன் போரால், வெளிநாடுகளில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
மேலும், வட மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் வெப்ப அலையின் காரணமாக தானியங்கள் கருகி கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது.
இதனிடையே, தொழில் அமைப்பு ரோலர் மாவு மில்லர்களின் கூட்டமைப்பு, கடந்த சில நாட்களாக கோதுமை கிடைக்காதது மற்றும் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.