ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி கிடைக்கும்; பத்ரா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பத்ரா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால் ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி கிடைக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
நன்றி தெரிவிக்கிறேன்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று சித்ரதுர்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு மழையால் நிரம்பியுள்ள வாணி விலாஸ் சாகர் அணைக்கு அவர் பாகினா பூஜை செய்தார். இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-
மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்த வாணிவிலாஸ் சாகர் அணை 88 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது. 75 ஆண்டுகளுக்கு இந்த அணைக்கு பாகினா பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையொட்டி இன்று (நேற்று) பாகினா பூஜை செய்துள்ளேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய கர்நாடக பகுதியில் பாசன வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த அணையை மைசூரு மகாராஜாக்கள் கட்டினர். அவர்கள் தங்களின் ஆபரணங்களை விற்று அணையை கட்டினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வறண்ட கர்நாடகம்
இந்த அணைக்கு நிரந்தரமாக தண்ணீர் வரும் வகையில் இணைப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை இருக்காது. வறண்ட கர்நாடகம் என்ற பெயரும் போய்விடும். பத்ரா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி நமக்கு கிடைக்கும். மத்திய கர்நாடக பகுதியில் இந்த இணை முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் கிடைக்கும் நீர் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.