மாநில அரசின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
திருவனந்தபுரம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி (நேற்று) முதல் இம்மாதம் 3-ந் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, 'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது, " திமுக-கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான நட்பு என்பது கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே இருக்கிறது. நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் திமுக கட்சி கொடியின் நிறத்தில் கூட பாதி சிவப்பு உள்ளது.
மாநில அரசின் உரிமைகளை பாஜக அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம். காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்வி கொள்கை.
தேசிய கல்வி கொள்கை, காவி கொள்கையாக உள்ளது. தமிழகம், கேரளா மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. கவர்னர்களை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.
மாநிலங்கள் நகராட்சி போல் மாறி வருகின்றன. அது இருக்கும் இடம் தெரியாமல் பின்னால் தள்ளப்பட்டுள்ளன. நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்களை அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டவர்களால் கேட்கப்படுவதுதான் மாநில சுயாட்சி.
மாநில சுயாட்சி, மதச்சார்பின்மையை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். சகோதரத்துவம், சமதர்மம்,சமூகநீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும்.
நமது அரசியலமைப்பு சட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை. நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தின் போர்வையில் செய்யப்பார்க்கிறார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.