சி.பி.ஐ. தவறாக பயன்படுத்தப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் 14 எதிர்க்கட்சிகள் வழக்கு 5-ந் தேதி விசாரணை

சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன.

Update: 2023-03-24 19:13 GMT

புதுடெல்லி, 

சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கு 5-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பாக 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கைத் தொடுத்துள்ளன.

காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதாதளம், பாரத ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, தேசிய மாநாடு உள்ளிட்ட 14 கட்சிகள் கூட்டாக இந்த வழக்கைத் தொடுத்துள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பாக மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி நேற்று ஆஜராகி முறையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் எதிர்காலத்துக்காக வழிமுறைகள் வேண்டும் என்று கேட்கிறோம். இது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக 14 கட்சிகளின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்பு ஆகும். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித்தலைவர்கள் மீதானவைதான்.

மத்தியில் பா.ஜ.க. கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் சி.பி.ஐ., மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுக்கிற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014-க்கு முன்பு, 2014-க்கு பின்பு என்று பார்த்தால் வழக்குகளின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஆனால் தண்டனை அளவோ 4 முதல் 5 சதவீதம்தான். மத்திய விசாரணை அமைப்புகள் கைது செய்வதற்கு முந்தைய வழிகாட்டுதல்கள் வேண்டும், கைது செய்தபின்னர் ஜாமீன் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

5-ந் தேதி விசாரணை

இந்த வழக்கை 5-ந் தேதி விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ஒப்புக்கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்