எம்.எல்.ஏ.க்களுக்கு சி.பி.ஐ. சோதனை அச்சுறுத்தல்; கெஜ்ரிவால் இல்லத்தில் நாளை ஆலோசனை கூட்டம்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு சி.பி.ஐ., அமலாக்க துறை சோதனை அச்சுறுத்தல் பற்றி நாளை காலை கெஜ்ரிவால் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், 97 மின்சார பேருந்துகளை மாநிலத்திற்கு இன்று அர்ப்பணித்து, கொடியசைத்து தொடக்கி வைத்து நிகழ்ச்சியில் பேசும்போது, கடந்த 2 முதல் 3 நாட்களாக சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தப்படும் என தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன. கட்சியை விட்டு விலகும்படியும், அதற்காக பணம் அளிக்கப்படும் என ஆசை வார்த்தைகளும் அவர்களுக்கு கூறப்பட்டு வருகின்றன.
இதனை எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். இது மிக தீவிர விசயம். இதனை பற்றி கட்சியின் அரசியல் விவகார கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இதற்காக இன்று மாலை 4 மணியளவில் ஒரு கூட்டம் நடைபெறும் என அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த கூட்டம் நாளைக்கு நடத்த முடிவாகி உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கு கொள்ளும் கூட்டம் ஒன்று நாளை காலை 11 மணியளவில் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெறும் என்றும் அதில் கலந்து கொள்ளும்படி அவர்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பும் விடுத்து உள்ளார்.
இந்த கூட்டத்தில் டெல்லியில் சமீபத்திய அரசியல் சூழ்நிலை, கட்சி தலைவர்கள் மீது அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. சோதனைகள் மற்றும் டெல்லி அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய பா.ஜ.க. முயற்சி செய்யும் சூழல் ஆகியவற்றை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 19-ந்தேதி இதன்மீது நடவடிக்கை எடுக்கும் ஒரு பகுதியாக மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அமைப்பு அதிரடி சோதனையிலும் ஈடுபட்டது.
இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை நடத்தும் மதுபான ஆயத்தீர்வை கொள்கை பற்றி அமலாக்க துறை நேற்று வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது என்று அத்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.