கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 4,987 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
192 டி.எம்.சி. நீர்
காவிரி நதிநீர் பங்கீட்டின் படி ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் தமிழகத்துக்கு, கர்நாடகம் 192 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
அதாவது ஜூன் மாதம் 10 டி.எம்.சி., ஜூலை-34, ஆகஸ்டு-50, செப்டம்பர்-40, அக்டோபர்-22, நவம்பர்-15, டிசம்பர்-8, ஜனவரி-3, பிப்ரவரி-2.5, மார்ச்-2.5, ஏப்ரல்-2.5, மே-2.5 என மொத்தம் 192 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
ஆனால் பருவமழை பொய்த்து போனதால் நீர்வரத்து இல்லாமல் கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), கபினி அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தபடி இருந்தது. இதனால் ஜூலை மாதம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதில் சிக்கல் இருந்து வந்தது. இதன் காரணமாக கர்நாடக அரசும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறி வந்தது. இதற்கிடையே அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் காவிரியில் தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்திற்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிட்டது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு
அதாவது கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 4,987 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 2,487 கனஅடி நீரும், திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்கு பாய்ந்தோடி வருகிறது.
இதையொட்டி மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் மைசூருவில் உள்ள கபினி அணை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீர் இருப்பு விவரம்
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நேற்றைய நீர் இருப்பு 91.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7,916 கனஅடி நீர் வந்தது. அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,280 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர் இருப்பு 2,274.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7,886 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.