கார்-தனியார் பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு
பாகேபள்ளி அருகே கார்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.;
கோலார் தங்கவயல்:
கார்-தனியார் பஸ் மோதல்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா தொட்டகேஞ்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா (வயது 50). இவரது மனைவி அஞ்சலம்மா (48). இந்த தம்பதியின் மகன் அருணா. இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் காரில் பாகேபள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சந்தேகேட் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் வெங்கடகிருஷ்ணா உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
3 பேர் சாவு
இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெங்கடகிருஷ்ணா, அஞ்சலம்மா, அருணா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகேபள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரையும், தனியார் பஸ்சையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து பாகேபள்ளி புறநகர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.