மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், உருவ பொம்மை எரிப்பு... விவசாயிகளின் அடுத்த திட்டம்

பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறும்போது, பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

Update: 2024-02-24 03:14 GMT

புதுடெல்லி,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதன்படி, டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்காக பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லி நோக்கி சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த போராட்டம் கவனம் பெற்றுள்ளது.

விவசாய சங்கத்தினர் மத்திய மந்திரிகளுடன் 8, 12, 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும், அது தோல்வியிலேயே முடிந்தது. 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.

எனினும், கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில் 21 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை விவசாயிகள் புறந்தள்ளினர்.

இந்நிலையில், டெல்லி நோக்கிய பேரணியை விவசாயிகள் வருகிற 29-ந்தேதி வரை நிறுத்துவது என முடிவு செய்து அறிவித்து உள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அதன்பின்னரே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

எனினும், விவசாயிகள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்து உள்ளனர். இதனை தொடர்ந்து, விவசாயிகள் தொடர்பான விசயங்களை பற்றி நாளைய தினம் கருத்தரங்கங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வருகிற 26-ந்தேதி, உலக வர்த்தக அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக உருவ பொம்மைகளை எரிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இவை தவிர, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரு அமைப்புகளும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டு உள்ளன.

சுபகரண் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி இழப்பீடு ஆகியவற்றை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்தபோதும், விவசாயிகள் திருப்தியடையவில்லை. எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோரி வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறும்போது, பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்