மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரிக்க மந்திரிசபை முடிவு; சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேட்டி
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரிப்பது என்று மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதலீட்டு செலவுகள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு கொள்கைக்கு மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கொள்கையை கொண்டு வந்துள்ளோம். முதலீட்டு செலவுகளுக்கு கடன் பெறும் நிறுவனங்களில் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறோம். இந்த வேலைகள் உள்ளூர் மக்களுக்கு அதாவது கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று உறுதி செய்கிறோம்.
விதிமுறைகள் திருத்தம்
ஏ பிரிவு மற்றும் பி பிரிவு பணிகளிலும் கன்னடர்களுக்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என்று விதிமுறைகளை சேர்க்கிறோம். வித்யா விகாஸ் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஷூ மற்றும் காலுறைகள் வழங்க ரூ.132 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கர்நாடகத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதில் சில விதிமுறைகளை திருத்தியுள்ளோம்.
கற்பழிப்பு சம்பவங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகளை செய்து தண்டனை பெற்றவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது கூடாது என்று விதிமுறைகளை திருத்தியுள்ளோம்.
மேற்கு தொடர்ச்சி மலை
மைசூரு விமான நிலையத்தை மேம்படுத்த 240 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். அந்த விமான நிலையத்திற்கு மைசூரு நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயரை சூட்டுவது என்று தீர்மானித்துள்ளோம். ஹாசன் நகர வளர்ச்சித்துறை சார்பில் ஹாசனில் 1,140 ஏக்கரில் லே-அவுட் அமைக்க ரூ.1,070 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிதி அரசுடையது அல்ல. பயனாளிகள் செலுத்திய பணம். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1,152 ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதி அளித்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து மாநில அரசின் கருத்துகளை மத்திய அரசு கேட்டது. அந்த அறிக்கையை ஏற்று கொண்டால் அந்த மலையை ஒட்டி வசிக்கும் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கும். அதனால் கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். இதற்கான காரணங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.