கர்நாடக மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அடக்கம்; அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடந்தது

மாரடைப்பால் மரணம் அடைந்த கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-09-07 22:22 GMT

பெலகாவி மாவட்டம் பெல்லத பாகேவாடி கிராமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த மந்திரி உமேஷ் கட்டியின் உடலுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி. 

பெங்களூரு: மாரடைப்பால் மரணம் அடைந்த கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மாரடைப்பால் இறந்தார்

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் உணவு மற்றும் வனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ்கட்டி.

மூத்த மந்திரியான அவர் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவரது உடலில் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இருக்கவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக அவரது இதயத்தை செயல்பட வைக்க டாக்டர்கள் சி.பி.ஆர். என்று சொல்லக்கூடிய இதய பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் நின்றுபோன அவரது இதயம் மீண்டும் செயல்படவே இல்லை. இதையடுத்து அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

மோசமான வானிலை

மரணம் அடைந்த மந்திரி உமேஷ்கட்டிக்கு வயது 61. அவர் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி பிறந்தார். அவருக்கு ஷீலா என்ற மனைவி, நிகில் என்ற மகன், சினேகா என்ற மகள் உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நள்ளிரவு 1 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனைக்கு மந்திரிகளுடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவரது தலையை கையால் வருடி தனது அதீத துக்கத்தை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து சொந்த ஊரான பெலகாவிக்கு எடுத்து செல்வதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் காலை 7 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

தனியார் விமானம் கிடைக்காததால் ஹெலிகாப்டர் மூலம் உடலை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. சென்னையில் இருந்து தனி விமானத்தை வரவழைத்து அவரது உடல் பெலகாவிக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் உடலை எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. பகல் 1 மணியளவில் பெங்களூருவில் இருந்து உடல் தனி விமானம் மூலம் பெலகாவிக்கு எடுத்து செல்லப்பட்டது.

சித்தராமையா அஞ்சலி

முன்னதாக எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உமேஷ்கட்டியின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட மந்திரிகள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். உமேஷ்கட்டிக்கு ஏற்கனவே 2 தடவை மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு அவரது ரத்த குழாயில் `ஸ்டன்ட்' கருவி பொருத்தப்பட்டு இருந்தது.

உமேஷ்கட்டி கடந்த 1985-ம் ஆண்டு முதல் முறையாக பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தனது தந்தை விஸ்வநாத்கட்டியின் திடீர் இறப்பை அடுத்து அரசியலுக்கு வந்த அவர் தனது 25-வது வயதில் சட்டசபையில் காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் இதுவரை 8 முறை சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதில் 6 முறை ஹுக்கேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

அரசியல் பயணம்

இதில் 4 முறை மந்திரியாகவும் இருந்தார். ஜே.எச்.பட்டீல், எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ்ஷெட்டர், பசவராஜ் பொம்மை ஆகியோரின் மந்திரிசபையில் பணியாற்றியுள்ளார். ஜே.எச்.பட்டீல் மந்திரிசபையில் சர்க்கரை, பொதுப்பணி, எடியூரப்பா மந்திரிசபையில் சிறைத்துறை, விவசாயம், தோட்டக்கலை துறைகளின் மந்திரியாக பணியாற்றினார். அவர் ஜனதா கட்சியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளிலும் அவர் பணியாற்றினார். அடிப்படையில் அவர் ஜனதா பரிவாரை சேர்ந்தவர். கடந்த 2008-ம் ஆண்டு அவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அக்கட்சி சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மேலும் தான் முதல்-மந்திரி பதவிக்கு தகுதியானவன் என்றும், அந்த பதவி மீது தனக்கும் ஆசை இருப்பதாகவும் அவ்வப்போது கூறி வந்தார்.

மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூடிய தலைவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெலகாவி மாவட்ட அரசியலில் மக்கள் செல்வாக்கு கொண்ட பலம் வாய்ந்த தலைவராக உமேஷ்கட்டி திகழ்ந்தார். அவரது திடீர் மரணம், பா.ஜனதாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்கள் துக்கம்

உமேஷ்கட்டியின் மறைவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடகத்தில் இன்று (நேற்று) முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பெலகாவி மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மந்திரி உமேஷ்கட்டி மரணம் அடைந்ததால், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஹுக்கேரி நகரில் வணிகர்கள் தங்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை தாமாக முன்வந்து மூடினர். அந்த நகரமே சோகத்தில் மூழ்கி இருந்தது.

மக்கள் திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி

பெலகாவி சாம்ரா விமான நிலையத்தில் இருந்து உமேஷ் கட்டியின் உடல் ராணுவ வாகனத்தின் மூலம் ஹுக்கேரி தாலுகா பெல்லத பாகேவாடி கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. பெலகாவியில் இருந்து ஹுக்கேரி, ஹுக்கேரியில் இருந்து பெல்லதபாகேவாடி கிராமம் வரையிலும் வழிநெடுகிலும் ஆதரவாளர்கள், பா.ஜனதாவினர், பொதுமக்கள் திரண்டு வந்து சாலையின் இருபுறமும் நின்று மலர்கள் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சர்க்கரை ஆலையில் வைக்கப்பட்ட உமேஷ் கட்டியின் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உமேஷ்கட்டியின் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் அனுசரிப்பதை அடுத்து கர்நாடகத்தில் 3 நாட்கள் நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹுக்கேரியில் இடைத்தேர்தல் நடைபெறுமா?

உமேஷ்கட்டி மரணம் அடைந்ததால் மந்திரிசபையில் காலி இடங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சட்டசபையில் ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக சட்டசபை உறுப்பினர் மரணம் அடைந்தால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதாவது வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் ஹுக்கேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என்றே சொல்லப்படுகிறது.

தனி மாநிலத்திற்கு குரல் கொடுத்தவர்

கர்நாடக மந்திரிசபையில் மந்திரியாக இடம் பெற்று இருந்தாலும் உமேஷ்கட்டி, அவ்வப்போது தனி மாநில கோரிக்கையை முன்வைத்து வந்தார். வளர்ச்சியில் வட கர்நாடகம் பின்தங்கி இருப்பதால் கர்நாடகத்தை 2 ஆக பிரித்து வட கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இதற்காக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தனது நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நாட்டில் மாநிலங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாகவும், அதன்படி கர்நாடகம் 2 ஆக பிரிக்கப்படும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமேஷ்கட்டியின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுத சகோதரர்

மந்திரி உமேஷ்கட்டி பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பெலகாவிக்கு எடுத்து செல்லப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அவரது உடல் ராணுவ வாகனம் மூலம் ஹுக்கேரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஹுக்கேரியில் இருந்து உமேஷ்கட்டியின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான பெல்லத பாகேவாடி வரை நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் துக்கம் தாளாமல் உமேஷ்கட்டி 'அமர் ரகே' என்று முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். அப்போது அந்த ராணுவ வாகனத்தில் உமேஷ்கட்டியின் உடல் அருகே அவரது சகோதரர் ரமேஷ்கட்டி அமர்ந்திருந்தார். அவர் தனது அண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதபடியே இருந்தார். வழி நெடுக இருந்த மக்களை பார்த்து அவர் கைகூப்பி வணங்கினார். அவர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்