மனைவி, மகனை கொடூரமாக கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை-பரபரப்பு தகவல்கள்

குமட்டாவில் மனைவி, மகனை கொடூரமாக கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். தப்பியோட முயன்ற மகனை விரட்டி சென்று கொன்ற கொடூரம் நடந்துள்ளது.

Update: 2022-07-08 22:02 GMT

மங்களூரு: குமட்டாவில் மனைவி, மகனை கொடூரமாக கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். தப்பியோட முயன்ற மகனை விரட்டி சென்று கொன்ற கொடூரம் நடந்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்ப தகராறு

உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா தாலுகா பங்கனே கிராமத்தை சேர்ந்தவர் ராமா மராத்தி(வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி தாக்கி மராத்தி (35). இந்த தம்பதிக்கு லட்சுமண் (12) என்பவன் உள்பட 2 மகன்கள்.

மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த ராமா, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மனைவி-மகன் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் ராமா மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டிருந்த மனைவி தாக்கியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த தாக்கி, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி, துடித்து உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

இதனை பார்த்த ராமா, 2 பேரையும் விரட்டி சென்று வெட்ட முயன்றார். அப்போது ஒருவர் ராமாவிடம் சிக்காமல் தப்பியோடிவிட்டார். லட்சுமண் மட்டும் ராமாவிடம் சிக்கிக் கொண்டார். மகன் என்றும் பாராமல் ராமா, லட்சுமணை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் லட்சுமணும் பரிதாபமாக உயிரிழந்தான்.

தொழிலாளி தற்கொலை

குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட ராமா, வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குமட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தாக்கி வீட்டில் கொலை செய்யப்பட்டும், ராமா தூக்கிலும் பிணமாக கிடந்தனர். மேலும் லட்சுமண் வீட்டின் அருகே ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக குடிபோதையில் மனைவி, மகனை கொன்றுவிட்டு ராமா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்