அரசு பள்ளி கட்டுமான பணிக்கு பணம் விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர்கள் கைது

சாம்ராஜ்நகரில் அரசு பள்ளி கட்டுமானப்பணிக்கு பணம் விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 என்ஜினீயர்களை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-10 21:13 GMT

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகரில் அரசு பள்ளி கட்டுமானப்பணிக்கு பணம் விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 என்ஜினீயர்களை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

ரூ.30 ஆயிரம் லஞ்சம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் (தாலுகா) பாகலி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கட்டுமானப்பணிகளை சூர்யா பில்டர்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்து, கட்டி வருகிறது. தற்போது பள்ளியில் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகளுக்கான பணத்தை விடுவிக்கும்படி ஒப்பந்ததாரர் தரப்பில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இது உதவி என்ஜினீயர் கெம்பராஜ், ஜூனியர் என்ஜினீயர் மதுசூதன் ஆகியோரின் கவனத்திற்கு வந்தது. அவர்கள் கட்டுமானப்பணிக்கான பணத்தை விடுவிக்கவேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் கேட்டனர். முதலில் பணம் தருவதாக கூறிய ஒப்பந்ததாரர் பின்னர் இது குறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

2 என்ஜினீயர்கள் கைது

இந்த புகாரை ஏற்ற லோக் அயுக்தா போலீசார், ஓப்பந்ததாரரை அழைத்து, ஆலோசனை வழங்கினர். பின்னர் அவர்கள் ஒப்பந்ததாரரிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். இந்த பணத்தை ஒப்பந்ததாரர் உதவி என்ஜினீயர் கெம்பராஜ் மற்றும் ஜூனியர் என்ஜினீயர் மதுசூதன் ஆகியோரிடம் வழங்கினார்.

அப்போது அங்கு வந்த லோக் அயுக்தா போலீசார் 2 பேரையும் கையும் , களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்