கர்நாடகத்தில் அம்பேத்கர், சங்கொள்ளி ராயண்ணா பெயர்களில் உண்டு உறைவிட பள்ளிகள்; மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தகவல்

கர்நாடகத்தில் அம்பேத்கர், சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரின் பெயரில் உண்டு உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும் என்று மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-01 15:13 GMT

சிக்கமகளூரு;

மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி

சிக்கமகளூரு டவுன் குவெம்பு கலையரங்கில், மத்தியில் பா.ஜனதாவின் 8 ஆண்டுகால ஆட்சி நிறைவு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மாநில சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் ஆகிறது. அதேபோல் பிரதமராக நரேந்திர மோடி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து நாட்டை மாற்றுப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த வகையில் தற்போது பிரதமரின் குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் விவசாயி, தொழிலாளிகளுக்கான திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார் என்றார்.

நல்ல தீர்ப்பு...

இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மலாலி மசூதி இடத்தில் சிவன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்துக்களுக்கு உட்பட்ட கோவில்களை இடித்து மசூதி கட்டப்பட்டதற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். ஒருவருடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து புண்ணியம் தேடமுடியாது. எனவே, மலாலி விவகாரத்தில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும்.

கர்நாடகத்தில் நாராயணகுரு பெயரில் 4 உண்டு உறைவிட பள்ளிகளும், டாக்டர் அம்பேத்கர் பெயரில் 100 உண்டு உறைவிட பள்ளிகளும், சங்கொள்ளி ராயண்ணா பெயரில் 50 உண்டு உறைவிட பள்ளிகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வியை காவி மையமாக மாற்றி வருவதாக சித்தராமையா கூறி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசின் சிறப்பான ஆட்சி, நலத்திட்டங்களை பொறுக்க முடியாமல் சித்தராமையா, பா.ஜனதாவை குறை கூறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்