ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பார்வையற்ற முஸ்லிம் கவிஞருக்கு அழைப்பு

குடிசை வீட்டில் வசித்து வரும் அக்பர் தாஜ் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.

Update: 2024-01-08 07:25 GMT

காந்த்வா,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற 15-ந்தேதிக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் 16-ந்தேதி பிரான் பிரதிஷ்தா (சிலை பிரதிஷ்டை) பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிர, 2,200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது. காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அருண் கோவில், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டு உள்ளது. அது கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தரைப்பகுதியும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்களையும் கோவில் கொண்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் ஹப்லா பீப்லா கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் மத ஆராதனை பாடல்களை பாடுபவர் மற்றும் கவிஞரான அக்பர் தாஜ் (வயது 42) என்பவருக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், இதனை பெற்று கொண்டதற்காக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிறு வயதில் இருந்து கடவுள் ராமரை புகழ்ந்து கவிகளை இயற்றியும், பாடியும் மற்றும் ஆராதனைகள் செய்தும் வந்திருக்கிறார். மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவர், குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

அவர், அயோத்தி நகருக்கு வருகிற 14-ந்தேதி வருகை தந்து, கடவுள் ராமரை பற்றிய தன்னுடைய கவிகளை பாட இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, நான் நாடு முழுவதும் பயணித்திருக்கிறேன். ஆனால், அயோத்திக்கு என்னை அழைத்ததற்காக, அதுவும், ராம்ஜி பத்ராச்சார்யா (இந்து மத தலைவர்) சார்பாக அழைத்ததில் நான் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் வேறு பல நிகழ்ச்சிகளை விட்டு விட்டு, அயோத்திக்கு செல்ல இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்