'400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற பா.ஜ.க.வின் கனவு நிறைவேறாது' - பகவந்த் மான்
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க.வால் அடைய முடியாது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 4-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பா.ஜ.க. கூறி வருகிறது.
இந்நிலையில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க.வால் அடைய முடியாது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போவதில்லை. அவர்களால் கரையைக் கூட கடக்க முடியாது. பா.ஜ.க. இந்த முறை முழுமையாக தோல்வி அடைந்து, வனவாசத்திற்கு அனுப்பப்படும்.
தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறையில் வைத்திருக்க முடியாது எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணம்."
இவ்வாறு பகவந்த் மான் தெரிவித்தார்.