பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
தமிழக பா.ஜனதா தலைவரும், பா.ஜனதாவின் கா்நாடக சட்டசபை தேர்தல் துணை பொறுப்பாளருமான அண்ணாமலை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொலைநோக்கு பார்வை
பா.ஜனதா எப்போதும் மாற்றத்திற்கான கட்சியாக திகழ்கிறது. நாட்டின் நலன் காக்க வளர்ச்சியை ஏற்படுத்த காலத்திற்கு ஏற்றபடி மத்திய பா.ஜனதா அரசு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. தற்போது பலம் வாய்ந்த பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதால் இது சாத்தியமாகியுள்ளது.
பண மதிப்பிழப்பு திட்டம், சரக்கு-சேவை வரி திட்டம், தற்சார்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் விளைவாக நாடு வேகமாக வளர்ச்சியை கண்டு வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை மாதம் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இதை தொடக்கத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் எதிர்த்தார். இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டார்.
75 புதிய முகங்கள்
நாட்டில் தொழில் வளா்ச்சிக்கு உகந்த சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையை கர்நாடகத்திலும் நீங்கள் பார்க்கலாம். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு உதவும். இந்த சட்டசபை தேர்தலில் 75 புதிய முகங்களுக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியுள்ளது. பலர் எளிய பின்னணியை கொண்டவர்களாக உள்ளனர். 224 தொகுதிகளுக்கும் நல்ல வேட்பாளர்களை வழங்கியுள்ளோம். இந்த வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கும்.
நாட்டில் காங்கிரஸ், தி.மு.க., பி.ஆர்.எஸ்., தேசிய மாநாடு பல்வேறு கட்சிகள் வாரிசு அரசியலை முன்வைத்து அரசியல் செய்கின்றன. தமிழ்நாட்டில் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் கடந்த 2018-19-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. குறுகிய காலத்தில் அந்த நிறுவனத்திற்கு எப்படி இந்த அளவுக்கு சொத்து வந்தது?.
சி.பி.ஐ. நடவடிக்கை
சென்னையில் சி.டி.எம்.ஏ. அமைப்பு அந்த நிறுவனத்திற்கு மட்டுமே விரைவாக அனுமதி வழங்கி வந்தது. இதுபற்றி நான் குரல் எழுப்பினேன். வருமான வரித்துறையினர் ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளது. கடந்த 14-ந் தேதி நான் தி.மு.க. மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். இதற்காக எனக்கு சிலர் நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதை ஏற்று கொண்டுள்ளேன். அவா்களின் அவதூறு வழக்குகளை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன்.
நான் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பேன். தி.மு.க. மந்திரிகளின் ஊழல் விஷயத்தில் சி.பி.ஐ. விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி, தொடக்க கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது நோக்கம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.