குஜராத் சட்டசபை தேர்தல்: 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
குஜராத் சட்டசபை தேர்தலில் 3 தொகுதிக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
குஜராத்தில், கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, கெரலு தொகுதியில் சர்தர்சின் சவுத்ரி, மான்சா தொகுதியில் ஜெயதிபாய் படேல், கர்படா தொகுதியில் மகேந்திரபாய் பாபோர் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
மான்சா தொகுதியில் போட்டியிடும் ஜெயதிபாய் படேல், கடந்த மார்ச் மாதம் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.