கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பெங்களூருவில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-08 22:28 GMT

பெங்களூரு:-

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கர்நாடக காங்கிரஸ் அரசின் விவசாயிகள் விரோத போக்கு மற்றும் தோல்விகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில். முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பாஸ்கர்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக கூறியது. ஆனால் அதை சரியான முறையில் செயல்படுத்தவில்லை. இந்த அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த அரசை கண்டித்து மேலும் போராட்டம் நடத்துவோம். விவசாயிகளுக்கு சரியான முறையில் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு அதிருப்தி

போதிய மழை பெய்யாததால், விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விவசாயிகள் விரோத அரசு ஆகும். உத்தரவத திட்டங்களுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதனால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த அரசுக்கு மக்கள் சாபம் விடுகிறார்கள்.

இந்த காங்கிரஸ் அரசை விரைவாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் இந்த அரசு விழித்துக்கொள்ளவில்லை.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

உத்தரவாத திட்டங்கள்

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை மீண்டும் வெற்றி பெற வைக்க நாங்கள் பாடுபடுவோம். வீடு வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவோம். உத்தரவாத திட்டங்களை செயல்படுத்துவதாக காங்கிரஸ் சொன்னது. ஆனால் எதையும் தற்போது சரியாக செயல்படுத்தவில்லை. சிறிய விஷயங்களுக்கு கூட பா.ஜனதா தொண்டர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். அதிகாரிகள் சட்டப்படி பணியாற்ற வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் மாநில அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. கோர்ட்டில் சரியான முறையில் கர்நாடகத்தின் வாதங்களை எடுத்து வைக்கவில்லை. இந்த விஷயத்தில் கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்துவிட்டது" என்றார்.

வாகன நெரிசல்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர். அவர்கள் வந்த வாகனங்கள் சேஷாத்திரிபுரம் ரோட்டோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அந்த ரோட்டில் நேற்று காலை வாகன நெரிசல் உண்டானது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. வாகன நெரிசலை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்