கவர்னர் கெலாட்டுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

உடுப்பி கல்லூரி ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் வழங்கினர்.

Update: 2023-08-04 22:12 GMT

பெங்களூரு:-

விசாரணை நடத்தவில்லை

உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரி கழிவறையில் மாணவியின் ஆபாச வீடியோவை சக மாணவிகள் சிலரே செல்போன் மூலம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 3 மாணவிகள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், கழிவறையில் ரகசிய கேமரா எதுவும் வைத்து வீடியோ எடுக்கப்படவில்லை என்று கூறினார். இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த சம்பவத்தில் அரசு சாியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்று கூறி பா.ஜனதாவின் மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆபாச வீடியோ

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் முன்னாள் மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தலைமையில் நேற்று பெங்களூருவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கடிதத்தையும் வழங்கினர். அதில் உடுப்பி கல்லூரி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியுளளனர். கவர்னரை சந்தித்த பிறகு கோட்டா சீனிவாச பூஜாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

உடுப்பி கல்லூரி ஆபாச வீடியோ விவகாரத்தில் மாநில அரசு அலட்சியமாக இருக்கிறது. அதனால் நாங்கள் இன்று (நேற்று) கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினோம். இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு கவர்னர், இதுகுறித்து அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதாக உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அரசு டி.எஸ்.பி. அளவிலான அதிகாரி மூலம் விசாரணை நடத்துகிறது. இதனால் அரசு மூலம் அந்த அதிகாரிக்கு அழுத்தம் வரலாம். அதனால் சரியான முறையில் விசாரணை நடைபெறாது.

இவ்வாறு கோட்டா சீனிவாச பூஜாரி கூறினார்.

புகார் அளிக்கவில்லை

இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி சித்தராமையா, "இந்த விவகாரம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அதனால் விசாரணை முடியட்டும். குற்றபத்திரிகை தாக்கல் செய்யட்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்