ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் கைது:

ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. மகனை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-04 05:00 GMT

பெங்களூரு-

கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்தை நேற்று முன்தினம் பெங்களூருவில் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். பிரசாந்த் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் ரூ.55 கோடி முறைகேட்டில் இதற்கு முன்பு சிக்கி இருந்ததும் தற்போது தெரியவந்துள்து. அதாவது கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது பிரசாந்த் கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றி இருந்தார்.

அப்போது அரசுக்கு சொந்தமான ரூ.55 கோடியை சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்திருந்ததார். அதாவது வங்கியில் இருந்த ரூ.55 கோடியை வேறு சில வங்கிகளுக்கு மாற்றி முறைகேடு செய்திருந்தார். இதையடுத்து, பிரசாந்த் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். மேலும் ரூ.55 கோடி முறைகேடு தொடர்பான வழக்கை விசாரிக்க சி.ஐ.டி. போலீசாருக்கு, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த விசாரணையை இன்னும் சி.ஐ.டி. போலீசார் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதற்குள் ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் பிரசாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்