தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக போலி செய்தி பரப்பிய உ.பி. பாஜக தலைவர்

இந்தி பேசியதற்காக பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக உ.பி. பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-04 11:28 GMT

டெல்லி,

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வரும் 8-ம் தேதி வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கொண்டாட தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் போலி செய்தி பரவியது. குறிப்பாக வட இந்திய ஊடகங்களில் இது தொடர்பாக போலி செய்திகள் பரவின. ஒரு இந்தி நாளிதழ்களில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் செய்தி வெளியாகின.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக உத்தரபிரதேச பாஜக தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் போலி செய்தியை பகிர்ந்துள்ளார்.

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த உத்தரபிரதேச பாஜக செய்தித்தொடர்பாளரான பிரசாந்த் உம்ராவ், இந்தியில் பேசியதற்காக தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக்கொல்லப்பட்டதாக டுவிட் செய்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பீகார் தலைவர் பங்கேற்றதாக பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக உத்தரபிரதேச பாஜக தலைவர் போலி செய்தியை பரப்பிய நிலையில் வடமாநிலங்களில் உள்ள பாஜக கட்சியின் சமூகவலைதளங்களில் இந்த போலி செய்தி பரப்பப்பட்டது.

அதேபோல், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதாக இந்தி மொழி செய்தி நாளிதழான தினிக் பாஸ்கர் என்ற செய்திதாளில் போலியாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள் பீகாரை சேர்ந்த நபரை கொலை செய்யும் புகைப்படத்தை தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக போலியாக அந்த செய்தி நிறுவனம் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், தன்வீர் போஸ்ட் சென்ற சமூகவலைதள பக்கத்தில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்தி பரப்பப்பட்டது.

இந்த போலி செய்திகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்படுவதாக டுவிட்டரில் போலி செய்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்திதொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், செய்தி தாளில் போலி செய்தி வெளியிட்ட இந்தி நாளிதழ் தினிக் பாஸ்கர் செய்தித்தாள் தலைமை ஆசிரியர், தன்வீர் போஸ்ட் என்ற டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்வீர் ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலி செய்தி வெளியிட்டது தொடர்பாக 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்