பா.ஜனதாவினர் நாட்டில் பிரிவினையை தூண்டுகிறார்கள்-ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேச்சு
நாட்டில் பா.ஜனதாவினர் பிரிவினையை ஏற்படுத்துவதாக ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கூறினார்.
கோலார் தங்கவயல்:
பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி எம்.பி., 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் ஒற்றுமைக்கான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர் கேரளாவிலும் மேற்கொண்டார். தற்போது அவர் கர்நாடகத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கி மேற்கொண்டு வருகிறார். நேற்று 5-வது நாளாக அவர் கர்நாடக மாநிலம் மண்டியாவில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் கலந்து கொண்டார். மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்று இருந்தனர். அவர்களுடன் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதரும் பங்கேற்றார்.
நாட்டு மக்கள் உணர வேண்டும்
இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் ரூபா கலா சசிதரும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். எனவே, தான் நம் நாட்டை மதசார்பற்ற நாடு என்று அழைக்கிறோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு சுதந்திரத்திற்காக போராடவில்லை. சோனியா காந்தி பதவிக்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்படாமல் அதை தூக்கி எறிந்த வரலாறு மக்களுக்கு தெரியும்.
நாட்டில் காங்கிரசார் மட்டுமே அனைத்து சாதி, மதத்தினரை ஒன்று சேர்த்து ஒருங்கிணைத்து வருகிறார்கள். நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது. ஆனால், பா.ஜனதா கட்சியினர் நாட்டில் பிரிவினையை தூண்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இந்த பாதயாத்திரை என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.
காங்கிரசுக்கு சாதகமான முடிவு
இந்த பாதயாத்திரையில் காங்கிரசார் மட்டும் இன்றி நாட்டு மக்களும் தாமாக முன்வந்து பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த பாதயாத்திரையின் வெற்றி என்பது 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தெரியவரும். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.