குஜராத் பாணியை கையில் எடுத்துள்ள பா.ஜனதா

கர்நாடக சட்டசபை தேர்தலில் குஜராத் பாணியை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. 72 புதுமுகங்கள், 12 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-04-18 18:45 GMT

கர்நாடக சட்டசபை தேர்தல்

224 தொகுதிகளை கொண்டு கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் சூறாவளியாய் சூழன்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளையுடன் (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சார்பில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆளும் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அக்கட்சி நேற்று முன்தினம் வரை 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. சிவமொக்கா நகர் மற்றும் மான்வி தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

அதிரடி முடிவு

இந்த தேர்தலில் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டு வருகிறது. பா.ஜனதா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அக்கட்சிக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக முடிவு வந்தது. அத்துடன் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பலருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தது. இதனால், பா.ஜனதா கட்சி தற்போதைய தேர்தலில் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதிகளவு புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் வாரிசு அரசியலை முன்னெடுக்காமல் இருப்பதற்காக தந்தை-மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் வழங்குவதை பா.ஜனதா தவிர்த்து வருகிறது.

குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் லட்சுமண் சவதி, ஈசுவரப்பா உள்ளிட்டோருக்கு டிக்கெட் வழங்க மறுத்தது. இதில் ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமண் சவதியும் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துவிட்டார். மேலும் அவர் சிவமொக்கா நகர் தொகுதியில் தனது மகனுக்கு டிக்கெட் கேட்டு வருகிறார். இதனால் அந்த தொகுதிக்கு பா.ஜனதா மேலிடம் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

பா.ஜனதா நேற்று முன் தினம் வரை 3 கட்டமாக222 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் 72 புதுமுகங்கள் ஆவார்கள். கர்நாடக பா.ஜனதா வரலாற்றில் இவ்வளவு புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் இந்த முறை பெண்களுக்கும் பா.ஜனதா அதிக வாய்ப்புகளை வழங்கி உள்ளது. இதுவரை 12 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதாவின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது குஜராத் பாணியை கையில் எடுத்துள்ளது தெளிவாக தெரிகிறது.

குஜராத் பாணி

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா 156 தொகுதிகளில் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சியை பிடித்தது. அங்கு பா.ஜனதா நடத்திய கருத்துக்கணிப்பில் வெற்றி பெற வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி, முன்னாள் துனை முதல்-மந்திரி நிதின் படேல் ஆகியோருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது.

பா.ஜனதாவின் இந்த முயற்சி அவர்களுக்கு கைமேல் பலன் கொடுத்தது எனலாம். இந்த முயற்சியால் அங்கு பா.ஜனதா ஆட்சியும் அமைத்தது. இதனால் குஜராத்தின் அதே பாணியை கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. ஆனால் குஜராத்தின் பாணி எந்த அளவுக்கு பா.ஜனதாவுக்கு கைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்