மங்களூரு குண்டுவெடிப்பிற்கும், பெங்களூரு குண்டுவெடிப்பிற்கும் தொடர்பில்லை; முதல்-மந்திரி சித்தராமையா

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை இன்று பார்வையிட உள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.;

Update:2024-03-02 12:19 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் பிரபலமான ஓட்டல் என்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனிடையே, இந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உணவக ஊழியர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பில் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் ஓட்டலில் சேதம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேக நபர் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர் பஸ்சில் வந்தவர் டைமரை செட்செய்து குண்டு வெடிக்கச் வைத்துள்ளார். துணை முதல்-மந்திரியும், உள்துறை மந்திரியும் நேற்று குண்டு வெடித்த ஓட்டலை பார்வையிட்டனர். நான் இன்று மருத்துவமனைக்கும், சம்பவ இடத்திற்கும் செல்ல உள்ளேன். இது ஒரு அமைப்பின் வேலையா இல்லையா என்று தெரியவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்யக் கூடாது. மங்களூரு  குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை. குண்டுவெடிப்பு சம்பவம் இன்னும் விசாரணையில் உள்ளது. அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்