சட்டம்-ஒழுங்கை காப்பதில் கர்நாடக அரசு தோல்வி; பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு

கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சிவமொக்காவில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பா.ஜனதா தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

Update: 2023-10-02 22:39 GMT

பெங்களூரு:

கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சிவமொக்காவில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பா.ஜனதா தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

அரசு தோல்வி அடைந்துவிட்டது

சிவமொக்காவில் நடந்த கலவரம் பற்றி பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிவமொக்கா இயல்பாகவே ஒரு சிக்கல் வாய்ந்த பகுதி. கடந்த காலங்களில் அங்கு பல்வேறு சமயங்களில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. அங்கு முஸ்லிம்கள் மீலாது நபி ஊர்வலம் நடத்தியபோது போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும். அதை இந்த அரசு செய்யாதது ஏன்?. சிவமொக்காவில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது.

பாதுகாப்பு பணிக்கு திறமை வாய்ந்த அதிகாரிகளை நியமித்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதபோது வன்முறைகள் நிகழ்கின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சமூக விரோதிகளுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

நளின்குமார் கட்டீல்

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறுகையில், "சிவமொக்காவில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தின் பின்னணியில் மதவாத சக்திகள் உள்ளன. மீலாது நபி ஊர்வலத்தின் பெயரில் இந்துக்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இதை நான் கண்டிக்கிறேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுகின்றன. சிவமொக்காவில் பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

விஜயேந்திரா-ஈசுவரப்பா

இதுகுறித்து சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கூறுகையில், "சமீபத்தில் சிவமொக்காவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆனால் மீலாது நபி ஊர்வலத்தில் நடந்த சம்பவத்தை பார்க்கும்போது, அது அமைதியை சீர்குலைக்கும் முயற்சி என்பது தெரிகிறது. தவறு செய்தவர்கள் மீது கருணை காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஊர்வலத்தில் கத்தியை பயன்படுத்தியுள்ளனர். யாரை எச்சரிக்க அதை பயன்படுத்தினர்?. அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கவரும் அரசியலை காங்கிரஸ் செய்கிறது. இந்து சமூகத்தினரை கிளறிவிடும் நோக்கத்தில் திப்பு சுல்தான் போஸ்டர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஒரு இந்து இளைஞர் கூட பங்கேற்கவில்லை. கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்து வந்தவர்கள் இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவமொக்காவில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்