மாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு

ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

Update: 2024-02-14 09:21 GMT

புவனேஸ்வர்,

நாடு முழுவதும் காலியாக இருக்கின்ற மாநிலங்களவையின் (ராஜ்யசபை) 56 காலி இடங்களுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் நாளையுடன் (15-ந்தேதி) முடிவடைகிறது.

இதனை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஒடிசா மாநிலத்தின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவிப்பதாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெயில்வே மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சித் துறையின் நலன்களை முன்னிட்டு மாநிலங்களவை தேர்தலில் அஸ்வினி வைஷ்ணவை பிஜு ஜனதா தளம் ஆதரிக்கும்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2019-ல் பிஜு ஜனதா தளத்தின் ஆதரவுடன் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்