பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

Update: 2024-01-08 05:38 GMT

புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை மற்றும் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி யு.டி.சல்வி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதனால், குற்றவாளிகள் ரதீஷம் ஷா, ஜெஷ்வந்த் சதுர்பாய் நய், கேஷ்பாய் வேதன்யா, பகபாய் வேதன்யா, ராஜ்பாய் சோனி, ரமேஷ்பாய் சவுகான், ஷைலேஷ்பாய் பட், பிபின் சந்திர ஜோஷி, கோவிந்தபாய் நய், மிதீஷ் பட், பிரதீப் மோதியா ஆகிய 11 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசு தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்திருந்தது.

குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சில பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது பில்கிஸ் பானுவின் மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதுடன், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, முன்கூட்டியே விடுதலை செய்யவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்