அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகும் ஐக்கிய ஜனதா தளம்.. முதல்-மந்திரியின் இல்லத்தில் தலைவர்கள் ஆலோசனை
பீகாரில் ஆளும் மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகினால் கூட்டணியின் பலம் 115 ஆக குறைந்து மெஜாரிட்டியை இழக்கும்.
பாட்னா:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா அணியில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் ஏற்படுகின்றன. அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்திலும், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்திலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தன.
இந்த சூழ்நிலையில், பீகாரில் இந்தியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இப்போது முதல்-மந்திரி நிதிஷ் குமார், இந்த மெகா கூட்டணியை விட்டு வெளியேறி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆக உள்ளதாகவும் இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் நிதிஷ் குமாரின் இல்லத்திற்கு விரைந்தனர். கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், மந்திரியும் தேசிய பொதுச்செயலாளருமான சஞ்சய் குமார் ஜா, மாநில சட்டமேலவை தலைவர் தேவேஸ் சந்திர தாக்கூர் போன்ற மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இல்லத்தில் நடைபெறுகிறது. பாஜகவின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டமும் இன்று நடக்க உள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற உறுப்பினர்களில் ஆட்சியமைக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் மெகா கூட்டணிக்கு 160 உறுப்பினர்களும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 82 உறுப்பினர்களும் உள்ளனர். 79 உறுப்பினர்களுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு 78 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 உறுப்பினர்களும் உள்ளனர்.
மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகினால் கூட்டணியின் பலம் 115 ஆக குறைந்து மெஜாரிட்டியை இழக்கும். ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் அந்த கூட்டணியின் பலம் 127 ஆக அதிகரிக்கும்.