சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜர்
வேலைக்காக நிலம் ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரது சகோதரியும், எம்.பி.யுமான மிசா பாரதி, இதே வழக்கில் அமலாக்கத்துறை முன்னர் ஆஜரானார்.
சி.பி.ஐ. விசாரணை
ராஷ்டிரீய ஜனதா தள கட்சித்தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 காலகட்டத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கான பிரதிபலனாக லாலு பிரசாத் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சமீபத்தில் லாலு பிரசாத்திடமும், அவரது மனைவி ராப்ரி தேவியுடமும் விசாரணை நடத்தியது.
அதேவேளையில் அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடி பணம், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தேஜஸ்வி யாதவ் ஆஜர்
முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சான்றுகளின்படி லாலு பிரசாத் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. முதல் 3 சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அமலாக்கத்துறையில் மிசா பாரதி
இந்நிலையில் இதே வழக்கு தொடர்பாக, தேஜஸ்வி யாதவின் சகோதரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியும் நேற்று டெல்லியில் அமலாக்க இயக்கக அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார். இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பாரதி உள்ளிட்டோருக்கு கடந்த 15-ந்தேதியன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.