பீகார்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல்!

அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமனதாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

Update: 2022-06-01 14:53 GMT

பாட்னா,

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எப்போதும் இந்தியாவில் விவாதத்துக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் முன்னெடுப்பால் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய அளவில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாட்டில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கும் நிலையில், பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விவாதிக்க, இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக, ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ-எம்எல் (விடுதலை), சிபிஐ, எச்ஏஎம் மற்றும் ஏஐஎம்ஐஎம் மற்றும் விஐபி ஆகிய ஒன்பது அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமனதாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர். பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் கணக்கெடுப்பு தொடங்கும் என்றார்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது;-

அனைத்து தலைவர்களும் ஒருமனதாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர். அடுத்தகட்டமாக, அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படும்.

சாதி வாரியான கணக்கெடுப்பில், அனைத்து சாதிகள், துணை சாதிகள் மற்றும் மதங்களும் உள்ளடக்கப்படும். அதில் ஏமாற்றங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த கடினமான பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். அதில் யாரும் விடுபடாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, மக்கள் தொகை கணக்கெடுப்பாக அல்லாமல், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை முன்மொழிவோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்காக அரசு பணியாற்றுவது எளிமையாக்கப்படும். இந்தப் பணிகளை விரைவில் தொடங்குவதோடு, அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்வோம். சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தவுடன், அரசு மேலும் வளர்ச்சிக்காக பாடுபடும்.

இவ்வாறு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.

நாட்டில் கடைசியாக 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் அப்போதைய தரவுகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என ராஷ்திரிய ஜனதா தளம் தெரிவித்து வருகிறது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தேசிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் தொழில்நுட்ப அடிப்படையில் தரவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதி கணக்கெடுப்பு "நிர்வாக ரீதியாக கடினமானது மற்றும் சிரமமானது" என்று மத்திய அரசு கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டாலும், இதற்கு முன்பாகவே கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் "சமூக-பொருளாதார ஆய்வு" என்ற பெயரில் இதே போன்ற கணக்கீடுகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்