பெங்களூருவில் 'பெஸ்காம்' இதுவரை மின் கட்டண ரசீது வழங்கவில்லை...

பெங்களூருவில் இந்த மாதம் தொடங்கி 10 நாட்கள் ஆகியும் இதுவரை மின் கட்டண ரசீது 'பெஸ்காம்' வழங்கவில்லை.

Update: 2023-06-09 18:45 GMT

பெங்களூரு:

ரசீது வழங்கப்படவில்லை

பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களுக்கு பெங்களூரு மின் விநியோக நிறுவனம் (பெஸ்காம்) மின் வினியோகம் செய்கிறது. மாதந்தோறும் 1-ந் தேதி தொடங்கி ஒரு வாரத்தில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் பயன்பாட்டை கணக்கீட்டு அதற்கான 'பில்' (ரசீது) கொடுக்கப்படும். ஆனால் நடப்பு ஜூன் மாதம் இன்று 10-ந் தேதி ஆகிவிட்டது. ஆனால் இதுவரை வீடுகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண ரசீது வழங்கப்படவில்லை.

இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டது. இது 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பொருந்தும் என்று அரசு கூறியது.

4 மடங்கு உயர்வு

இந்த மின் கட்டண உயர்வு காரணமாக வீடுகளுக்கு மின் கட்டணம் 2, 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தார்வார், கொப்பல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் வீட்டிற்கு கடந்த மே மாதம் வரை மின் கட்டணம் மாதம் ரூ.350 வரை வந்தது. ஆனால் தற்போது மின் கட்டணம் ரூ.1,800 ஆக வந்துள்ளது. இப்படி திடீரென 3, 4 மடங்கு கட்டணத்தை உயர்த்தினால் எங்களால் எப்படி கட்டணத்தை செலுத்த முடியும்" என்றார்.

கோரிக்கை

பெங்களூருவில் மின்கட்டண ரசீது வினியோகம் செய்ய ஆரம்பித்தால், 3, 4 மடங்கு மின் கட்டணம் அதிகமாக செலுத்தும் நிலை ஏற்படும் என்று சொல்கிறார்கள்.

இதனால் அரசுக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் நிலை உண்டாகும். கடந்த மே மாதத்திற்கான மின் கட்டண ரசீதை விரைவாக வழங்க வேண்டும் என்று பெங்களூரு நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்