பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது

பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. எனவே பெருமை அனைத்தும் காங்கிரஸ் கட்சியையே சேரும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2023-03-06 20:42 GMT

மைசூரு:-

லோக் அயுக்தாவை முடக்கவில்லை

மைசூரு நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் லோக் அயுக்தா செயல்பட்டபோது, அதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காநாடக ஐகோர்ட்டு லோக் அயுக்தா அமைப்பை மூடும்படி உத்தரவிட்டது. அதன்படி லோக் அயுக்தா அமைப்பு மூடப்பட்டது. இதற்கும் காங்கிரசிற்கும் எந்த தொடர்பு இல்லை. காங்கிரஸ்தான் லோக் அயுக்தா அமைப்பை மூடியதாக கூறுவதில் உண்மையில்லை. அது பொய்யான தகவல்.

லோக் அயுக்தாவிற்கு மாற்றாக ஊழல் தடுப்பு படை உருவாக்கப்பட்டது. ஊழல் தடுப்பு படை சிறப்பாக செயல்பட்டது. பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஊழல் தடுப்பு படையை முடக்கிவிட்டு, லோக் அயுக்தாவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டனர். காங்கிரஸ் முடக்கியது என்றால், ஏன் பா.ஜனதா ஐகோர்ட்டில் லோக் அயுக்தாவை மீண்டும் கொண்டு வருவதற்கு முறையிடவேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை திட்டம்....

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவாக இருப்பதாக பா.ஜனதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பா.ஜனதா கட்சியினருக்கு தெரியும். இருப்பினும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஊழல் செய்தவரை காப்பாற்றும் முயற்சியில்தான் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது.

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்காக வருகிறார். இந்த தேசிய நெடுஞ்சாலை முன்னாள் மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்ணான்டஸ் இருந்தபோது, தொடக்கப்பட்டது. தற்போது அவர் உயிருடன் இல்லை. ஆனால் பா.ஜனதா கட்சி அந்த பணிகளை முடித்துவிட்டு, நாங்கள்தான் தேசிய நெடுஞ்சாலையை அமைத்தோம் என்று தங்களை தாங்களே பாராட்டி கொள்கின்றனர். உண்மையில் இந்த பெருமை பா.ஜனதா கட்சியினருக்கு உரியது இல்லை. காங்கிரஸ் கட்சிக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்