பெங்களூரு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.;

Update:2023-05-30 05:19 IST

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கால அவகாசம்

பெங்களூருவில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இதனால் மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரே நாளில் எல்லாம் செய்துவிட முடியாது. இதற்கு கால அவகாசம் வேண்டும். பெங்களூருவில் ஒரு கோடி பேருக்கும் மேல் வாழ்கிறார்கள். 40 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை வெளியூர்களில் இருந்து இங்கு வந்து செல்கிறார்கள்.

இவர்களுக்கு நாம் சரியான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பெங்களூருவின் வளர்ச்சிக்காக அதிகாரிகள் அல்லாதோரிடமும் ஆலோசனை பெறுவேன். நிதி ஆதாரத்திற்கு மாநில அரசை நம்பி இருக்காமல் தனது தேவைகளை பூர்த்தி செய்ய சொந்த நிதி ஆதாரங்களை பெருக்கி கொள்ள வழிவகைகளை கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

செயல் திட்டம்

மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பது இல்லை என்று அதிகாரிகள் கூறினர். பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்ய ஒரு செயல் திட்டம் வகுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலை நடத்த தயாராகும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரிகளை உயர்த்த வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து உடனே முடிவு எடுக்க மாட்டேன். ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினேன். வார்டுகள் மறுசீரமைப்பு குறித்து ஆய்வு செய்ய மந்திரி ராமலிங்கரெட்டி தலைமையில் குழு அமைத்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்