பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூரு கோர்ட்டு மறுப்பு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூரு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-06-26 12:22 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பாலியல் வழக்குகள் அவர் மீது பதிவாகி உள்ளது. இதில் முதல் 2 வழக்குகளில் போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, 3-வது பாலியல் வழக்கில் மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவினர் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் காவல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் அவர் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, பாலியல் வழக்கில் இருந்து ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அடிப்படையில் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. 3 வழக்குகள் இருக்கும் சூழ்நிலையில் நேற்று புதிதாக ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க நேரிடும். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணங்களை காட்டி ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிபதி முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருதி பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்