ரூ.9 லட்சம் மதிப்பிலான 6 ஆயிரம் லிட்டர் பீர் பறிமுதல்
சிக்கமகளூரு சோதனைச்சாவடியில் லாரியில் கொண்டு சென்ற ரூ.9 லட்சம் மதிப்பிலான 6 ஆயிரம் லிட்டர் பீர் பறிமுதல் செய்யப்பட்டது.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு சோதனைச்சாவடியில் லாரியில் கொண்டு சென்ற ரூ.9 லட்சம் மதிப்பிலான 6 ஆயிரம் லிட்டர் பீர் பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிர சோதனை
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு மதுபானம், பணம், தங்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனைச்சாவடி அமைத்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பீர் பறிமுதல்
இந்த நிலையில் கடூர் அருகே தேவரஹள்ளி பகுதியில் சிக்கமகளூரு சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் பெட்டி, பெட்டியாக பீர் பாட்டில்கள் இருந்தது.
ஆனால் அந்த பீர் பாட்டில்களை கொண்டு செல்ல எந்த ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அந்த பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.9.10 லட்சம் மதிப்பிலான 6,250 லிட்டர் பீர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரொக்கம் பறிமுதல்
இதேபோல், அதே சோதனைச்சாவடியில் வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். காரில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் டிரைவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர்.
மேலும், கொப்பா தாலுகா கடிக்கல் சோதனைச்சாவடியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2.80 லட்சம் ரொக்கம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.